மகாசிவராத்திரி விழா: காளகஸ்தி கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர் - இரவு முழுவதும் ஆன்மீக நிகழ்ச்சிகள்
பஞ்ச பூத தலங்களில் வாயுதலமாக விளங்கும் காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி பிரமோற்சவ விழா இன்று நடக்கிறது. இதையொட்டி காலை லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாகச் செய்துள்ளது. சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள நேற்று மதியம் முதலே காளகஸ்தியில் பக்தர்கள் குவியத் தொடங்கினார்கள். இன்று மதியம் வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். இதனால் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு வாயுலிங்கேஸ்வரர் நந்தி வாகனத்திலும், பிரசுனாம்பிகை தாயார் சிம்ம வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்கள். சிவராத்திரி அன்று பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் இருப்பார்கள்.
இதனால் அவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிப்பதற்காக பக்தி பாடல்கள், இசை கச்சேரிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நாடகங்கள் போன்ற ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடத்தப்படுகின்றன. மேலும் கோலாட்டம், போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.